ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அண்மையில் ஆயுளாகக் குறைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேர் உள்பட இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச் சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி கள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா ஆகியோர் முன்னிலை யில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி முன்வைத்த வாதம் வருமாறு:
1991-ல் என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துவிடலாம். ஆனால் எங்களால் மறக்க முடியாது. 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது, மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
இந்த வழக்கை விசாரித்தது சிபி.ஐ. மத்திய அரசின் சட்டங் களின் கீழ்தான் வழக்கு விசாரணை நடைபெற்றது. எனவே குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என்று மீண்டும் தெளிவுபடுத்துகிறேன் என்று வாஹன்வதி வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் புதன்கிழமை ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, இப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லை. இதனால் 7 பேரையும் விடுதலை செய்வதால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படாது என்று தெரிவித்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்