தேஜாஸ் சொகுசு ரயிலில் ஹெட் போன்கள் திருடப்பட்டுள்ளன. எல்இடி திரைகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்டவாளத்தில் ஓடும் விமானம் என்ற விளம்பரத்துடன் தேஜாஸ் சொகுசு ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கடந்த 22-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவின் கர்மாலிக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.
தேஜாஸ் ரயிலில் விமானத்தில் இருப்பது போன்று இருக்கை, தானியங்கி கதவுகள், வைபை இணைய வசதி, எல்இடி திரையுடன் கூடிய தொலைக்காட்சி, ஹெட் போன்கள், தேயிலை, காபி வழங்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த ரயில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.
ரயிலின் முதல் பயணத்திலேயே 12-க்கும் மேற்பட்ட ஹெட்போன்கள் திருடப்பட்டுள்ளன. எல்இடி திரைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ரயில்வே நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதேநேரம் ரயிலில் உணவு சுவையாக இல்லை, கழிப் பறை சுத்தமாக இல்லை. ரயில்வே ஊழியர்களின் சேவை திருப்திகர மாக இல்லை என்று பயணிகளும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மழை இல்லாத காலங்களில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 5 நாட்கள் மும்பையில் இருந்து கோவாவுக்கு தேஜாஸ் ரயில் இயக்கப்படும். ஜூன் 10 முதல் அக்டோபர் 31 வரையிலான பருவ மழைக் காலத்தில் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும். ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,185, அதிகபட்ச கட்டணம் ரூ.2,740 ஆகும்.