பஞ்சாப் மாநில பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்கச் சொன்னதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாக நவ்ஜோத் சிங் சித்து விளக்கமளித்துள்ளார்.
பாஜக எம்.பி.யான சித்து அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். திடீர் ராஜினாமா குறித்து விளக்கம் கேட்டபோது, "பஞ்சாப் மாநில மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகின்றனர்" என்று பூடகமாகக் கூறிச் சென்றார்.
இதனால், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் சித்துவை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முயற்சித்து வரும் ஆம் ஆத்மி கட்சியில் அவர் சேரலாம் என சலசலக்கப்பட்டது.
சித்துவின் ராஜினாமாவை இன்னும் பாஜக மேலிடம் ஏற்கவில்லை.
இந்நிலையில், டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பஞ்சாப் மாநில பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்கச் சொன்னதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தேன்.
பஞ்சாப் மாநில மக்களின் நலன் மட்டுமே எனக்கு முக்கியம். பஞ்சாப் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். எனவேதான், என்னை பஞ்சாப் மாநில பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்கச் சொன்னவுடன் பதவியை ராஜினாமா செய்தேன்" என்றார்.
பாஜகவிலிருந்து விலகிய நிலையில் ஆம் ஆத்மியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, "பஞ்சாப் மக்கள் நலனுக்காக எந்தக் கட்சி பாடுபடுகிறதோ அந்தக் கட்சிக்காக பணியாற்றுவேன்" என்றார்.