ரயிலில் காத்திருப்போர் பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்ட்) இருப்பவர்களது டிக்கெட் ஆர்.ஏ.சி-க்கு வரும்போது, அதனை பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுத்தியது.
டெல்லியில் இன்று இத்திட்டத்தை தொடக்கி வைத்த மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் அதிரஞ்சன் சவுத்ரி, "கடந்த 10 நாள்களாக இத்திட்டம் பரிசோதனையில் இருந்தது. இப்போது முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இனிமேல் காத்திருப்போர் பட்டியிலில் இருப்பவர்களின் டிக்கெட் ஆர்.ஏ.சி.-க்கு வரும்போதோ அல்லது உறுதி செய்யப்படும்போதோ அத்தகவல் பயணிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அதில், உறுதி செய்யப்பட்டுள்ள இருக்கை எண், கோச் உள்ளிட்ட விவரங்கள், ரயில் கிளம்புவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்" என்றார் அமைச்சர்.
ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தால், இனி ரயில்வே இணையதளத்துக்கு சென்று டிக்கெட் நிலைமையை அறிவது, 139 என்ற எண்ணை தொடர்பு கொள்வது போன்றவற்றின் அவசியம் இருக்காது.