சிறார் மீதான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடூர குற்றங்களைப் புரிந்த 5 பேரின் மரண தண்டனையை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் குறைத்தது தொடர்பாக, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிங்கி விரானி என்ற பத்திரிகையாளர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த மனுவில், முன்னாள் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் பதவியில் இருந்தபோது, 35 குற்றவாளிகளில் மரண தண்டனை குறைக்கப்பட்டது. அதில், மரண தண்டனை குறைக்கப்பட்ட 5 வழக்குகள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மன்னிக்க முடியாத குற்றங்கள் தொடர்பானவை.
சிறாரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் மன்னிப்பு வழங்கப்படத் தகுதியற்றவர்கள் என்பதால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று (திங்கள்கிழமை) விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தும் முறை இதுவல்ல என்பதை மத்திய அரசுக்குச் சொல்ல விரும்புகிறோம் என்றார்.
பொது நல மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.