இந்தியா

நடிகை பாவனா கடத்தல் விவகாரம்: நடிகர் திலீப்பிடம் 13 மணி நேரம் தொடர்ந்து விசாரணை

பிடிஐ

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் திலீப், அவரது நண்பரும் இயக்குநருமான நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மேலாளர் அப்புன்னி ஆகியோரிடம் கேரள போலீஸார் 13 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தி, அதனைப் பதிவு செய்தனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ம் தேதி ஷூட்டிங் முடித்துவிட்டுத் திரும்பும்போது நள்ளிரவில் ஒரு கும்பலால் காரில் கடத்தப்பட்டார். சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு பாவனா அந்தக் கும்பலிடம் இருந்து தப்பினார். கடத்தல், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக ரவுடி பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுனர் மார்ட்டின் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாவனா கடத்தல் விவகாரத்தில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் திலீப்பின் பெயர் அடிபட்டது. இதனை அவர் முற்றிலுமாக மறுத்து வந்தார். இதனிடையே இந்த வழக்கில் திலீப்பின் பெயரைக் குறிப்பிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ.1.5 கோடி பணம் தரவேண்டும் என பல்சர் சுனில் அவரது நண்பரான விக்னேஷ் மூலம் போனில் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக திலீப், அவரது நண்பரும், இயக்குநருமான நாதிர்ஷா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் போலீஸில் ஆதாரத்துடன் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விக்னேஷ் உட்பட 2 பேரைக் கைது செய்தனர். இதற்கிடையே பாவனா விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த திலீப், தான் எந்தவிதமான விசாரணைக்கும் தயார் என சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அலுவா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திலீப், நாதிர்ஷா, அப்புன்னி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் பிற்பகல் 12.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைந்தது. துணைக் காவல் துறைத் தலைவர் பி சந்தியா தலைமையில் அதிகாரிகள் 3 பேரிடமும் வழக்கு தொடர்பாக சரிமாரி கேள்விகளை எழுப்பி, அதனைப் பதிவு செய்தனர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் திலீப் கூறும்போது, ‘வழக்கு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. விசாரணை நல்லவிதமாகச் செல்கிறது. எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’ என்றார்.

SCROLL FOR NEXT