இந்தியா

பாக். கடற்படையினரால் 58 இந்திய மீனவர்கள் கைது

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைந்ததாக 58 இந்திய மீனவர்களை அந்த நாட்டு கடற்படை இன்று கைது செய்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படை செய்தித் தொடர்பாளர் முகமது பாரூக் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடற்படையின் எச்சரிக்கையையும் மீறி பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்கள் வந்த 9 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன” என்றார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், மாஜிஸ்திரேட் முன்பு நாளை ஆஜர்படுத்தப்பட்டு கராச்சியின் மாலிர் சிறையில் அடைக்கப்படுவர் என்று தெரிகிறது.

அரபிக் கடலில் சர் கிரீக் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இதனால், இருதரப்பு கடற்படையும் அவ்வப்போது மீனவர்களை கைது செய்கின்றனர்.

அண்மையில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து 337 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இப்போதைய புள்ளிவிவரப்படி பாகிஸ்தான் சிறையில் 97 இந்திய மீனவர்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT