இந்தியா

ஜூலை 4-ம் தேதி இஸ்ரேல் செல்கிறார் மோடி

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4 முதல் மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். இதன்மூலம் இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார்.

ஜூலை 4 ம் தேதி ஜெருசலேம் நகரின் பென்-குரியன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்கிறார். அப்போது இரு நாட்டு தேசிய கீதங்களை இந்திய வம்சாவளி இஸ்ரேலிய பாடகர் லியோரா இட்சாக் பாடவுள்ளார்.

அன்று மாலை நெதன்யாகு தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமருக்கு விருந்து அளிக்கிரார். அப்போது இரு தலைவர்களும் உதவியாளர்கள் இன்றி தனியாக பேச உள்ளனர்.

மறுநாள் ஜூலை 5-ம் தேதி இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்துப் பேசுகின்றனர். இதைத் தொடர்ந்து மோடிக்கு நெதன்யாகு மதிய விருந்து அளிக்கிறார்.

ஜெருசலேம் நகரில் உள்ள இஸ்ரேல் அருங்காட்சியத்துக்கு மோடியை நெதன்யாகு அழைத்துச் செல்கிறார். மாலை யில் டெல் அவிவ் நகரில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியிலும் நெதன்யாகு பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தில் இரு நாடுகள் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெதன்யாகு இந்தியா வருகை

இதனிடையே பிரதமர் மோடியின் இஸ்ரேலிய பயணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் பயணம் செய்ய வாய்ப்புள்ளதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

SCROLL FOR NEXT