கர்நாடக மாநிலத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஊழியர் களால் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
மைசூரில் உள்ள மாநில நிர்வாக பயிற்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றி வருபவர் ராஷ்மி மகேஷ். இந்த மையத்தில் உள்ள உணவகத்தின் மேலாளராக வெங்கடேஷ் (53) பணியாற்றி வந்தார். இவர் அந்த மையத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே கடந்த புதன்கிழமை மர்ம மான முறையில் இறந்து கிடந்தார்.
ராஷ்மி கொடுத்த பணி அழுத்தத்தின் காரணமாக வெங்கடேஷ் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மறைந்த வெங்கடேஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற ராஷ்மி மீது சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவரை மீட்டனர். இதுகுறித்து, ராஷ்மி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒப்பந்த தொழிலாளர்களும், வேலையை விட்டு நின்றவர்களும் என்னை பல நாட்களாக தாக்க திட்டமிட்டனர். இப்போது அதனை நிகழ்த்திவிட்டனர்” என்றார்.