இந்தியா

தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் நியூட்ரினோ ஆய்வகம்: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

ஆர்.ஷபிமுன்னா

தமிழகத்தின் தேனியில் மத்திய அரசு அமைக்க முயலும் நியூட்ரினோ ஆய்வகம், தமிழக அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இந்த தகவலை மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்தர்சிங் இன்று மக்களவையில் தகவல் கூறியுள்ளார்.

இது குறித்து தனது எழுத்து மூலமாக தெரிவித்த பதிலில் அமைச்சர் ஜிதேந்தர்சிங் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு போதி மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை துவங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக, தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற கோரியிருந்தது. ஆனால், இந்த அனுமதி கிடைக்காமல் அது நிலுவையில் உள்ளது. தற்போது, இதன் மீது ஒரு நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியரால் கடந்த ஜூலை 8, 2010-ல் நடத்தப்பட்டது. இதில் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 1200 பேர் கலந்து கொண்டனர். அதன் தொகுதி எம் எல் ஏ, துணை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். இதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வக விஞ்ஞானிகள் பொறுமையுடன் விளக்கம் அளித்தனர். இதன் இறுதியில் பொதுமக்கள் அனுமதியுடன் அதன் ஆட்சியர் நியுட்ரினோ ஆய்வகத்தை அமைக்க ஆதரவளித்திருந்தார்.

மதுரை மற்றும் தேனியில் தங்கியபடி நியூட்ரினோ விஞ்ஞானிகள் பொட்டிபுரம் மக்களிடம் அவ்வப்போது ஆய்வகம் குறித்து உரையாடினர். அப்பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளிலும் இதன் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும்

அறிவியல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தற்போது, இந்த ஆய்வகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டை மாநிலங்களில் இருந்து யாரும் அரசை அணுகவில்லை. எனினும், இதை எதிர்த்து இருபொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதிமுக தலைவர் வைகோவால் மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் பிராந்தியதியக் கிளையில் ஜி.சுந்தர்ராஜனும் மனு அளித்துள்ளனர்.

இதில், தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதி இன்றி தொடரக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, கடந்த மே 22, 2015-ல் தமிழக அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை கடந்த சில தினங்களுக்கு முன் அமைத்துள்ளது. பசுமை தீர்பாயத்திற்கு நீண்ட காலமாக தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்காமையால் அதன் வழக்கு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதன் நீதிபதி உத்தரவின்படி, எம்.ஒ.இ.எப் அளித்த மாசுக்கட்டுபாடு அனுமதி காலாவதியாகி விட்டதால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT