கடந்த 5 ஆண்டுகளில் 27 தேர்தல்களில் தோல்வியை சந்தித்த காரணத்துக்காக, ராகுல் காந்தியின் பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்ற பின்னர், கடந்த 5 ஆண்டுகளில் பல மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை காங்கிரஸ் சந்தித்துள்ளது. காங்கிரஸ் வெற்றிக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தல், தேர்தல் பிரச்சாரம், பேட்டிகள், யாத்திரைகள் என்று ராகுல் காந்தியும் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டார்.
சமீபத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. அவற்றில் உ.பி., உத்தராகண்ட் மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அந்த மாநிலங்களில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மாறாக சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று பாஜக.வே ஆட்சி அமைத்தது. 5 மாநில தேர்தலில் பஞ்சாபில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
இதனால் ராகுல் காந்தியின் மேடை பேச்சுகள், அரசியல் அறிவு போன்றவற்றை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. உ.பி.யில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இதில் சமாஜ்வாதி 298 இடங்களிலும் காங்கிரஸ் 105 இடங்களிலும் போட்டியிட்டன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். ஆனால், உ.பி.யில் எத்தனை தொகுதிகள் இருக்கின்றன என்பது கூட தெரியாமல் எண்ணிக்கையை மாற்றி மாற்றி பேசினார். இதை சமூக வலைதளங்களில் பலர் கேலி செய்தனர்.
ஆனால், தேர்தலில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக ராகுல் காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான அமேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான ரேபரேலி சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த 2 தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், பாஜக.விடம் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. மேலும், உ.பி.யில் 105 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதுபோல் கடந்த 5 ஆண்டுகளில் 27 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இத்தனை தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ள ராகுல் காந்தியின் பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரி, மத்தியப் பிரதேச மாநிலம், ஹோஷங்காபாத் நகரைச் சேர்ந்த விஷால் திவான் என்ற பொறியியல் மாணவர் விண்ணப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக கின்னஸ் நிர்வாகத்துக்கு விண்ணப்பித்துள்ள விஷால் திவான், விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணத்தையும் செலுத்தி உள்ளார். விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதாக கின்னஸ் நிர்வாகமும் அவருக்கு பதில் அனுப்பி உள்ளது. ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்த விஷயத்துக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் ராகுல் காந்தியின் பெயர் சேர்க்கப்படுமா இல்லையா என்பதை கின்னஸ் நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், அதிகபட்ச தேர்தலில் தோல்வி அடைந்த ஒன்றே, ராகுல் காந்தியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்ப்பதற்கு தகுதியானதுதான் என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.