உத்தரப் பிரதேசத்தில் மகா யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் மற்றும் ஆளும் சமாஜ்வாடி கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2,500 கி.மீ. யாத்திரையை ராகுல் தொடங்கி உள்ளார். யாத்திரையின்போது அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து வருகிறார்.
இந்த யாத்திரையின் 6-வது நாளான இன்று, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் தொகுதியான அசம்கார் தொகுதிக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ''முன்பு யானை (பகுஜன் சமாஜ் கட்சி சின்னம்) எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டது. இதனால், யானைக்கு பதில் சைக்கிளுக்கு (சமாஜ்வாடி சின்னம்) ஆதரவு அளித்தீர்கள். ஆனால் சைக்கிள் பஞ்சராகி விட்டதோ, பின்னால் கட்டப்பட்டுள்ளதோ அல்லது உடைந்துவிட்டதோ தெரியாது. சைக்கிள் நகராமல் நிற்கிறது.
சமாஜ்வாடி தலைமையிலான அரசு ரேஷன் கார்டு கூட வழங்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் நீங்கள் கை (காங்கிரஸ் சின்னம்) பற்றி சிந்திக்க வேண்டும். கை சின்னம் ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்பதை நீங்களே பார்க்கலாம்'' என்றார்.
நேற்று பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து ராகுல் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்புப் பணத்தை மீட்பேன் என்ற மோடியின் வாக்குறுதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார்.