இந்தியா

குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பிடிஐ

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட் டர் வழக்கில், இரு பிரமாணப் பத்திரங்கள் தொடர்பாக மோடி அரசு போலியான சர்ச்சையை உருவாக்குகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் மற்றும் மூவர் 2004-ம் ஆண்டு என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். அவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அது போலியான என்கவுன்ட்டர் என குற்றம்சாட்டப் பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான 5 ஆவணங்கள் காணாமல் போயின.

இதுதொடர்பாக விசாரிக்க, உள்துறை கூடுதல் செயலர் பி.கே.பிரசாத் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு நேற்று முன்தினம் அறிக் கையை தாக்கல் செய்துள்ளது.

அதில், காணாமால் போன ஆவணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித் துள்ளது. அப்போதைய இணைச் செயலாளர் அளித்த தகவலின்படி, அவர் தனது மேலதிகாரிகளுக்கு அந்த ஆவணங்களைக் கோப்பில் இணைத்து அனுப்பியதாகவும், கோப்பு திரும்பி வரும்போது ஆவணங்கள் இல்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அப்போதைய உள்துறை அமைச்சராக சிதம்பரம் பதவி வகித்தார். இருப்பினும் அவரது பெயர் அறிக்கையில் குறிப்பிடப்பட வில்லை. இதுதொடர்பாக ப.சிதம் பரம் கூறியிருப்பதாவது:

இஷ்ரத் ஜஹான் மற்றும் மூவர் கொல்லப்பட்டது உண்மையான என்கவுன்ட்டரா அல்லது போலி என்கவுன்ட்டரா என்பதுதான் மையப் பிரச்சினை.

2013-ம் ஆண்டு முதல் நிலு வையிலிருக்கும் வழக்கின் முடிவில் தான் உண்மை வெளிவரும்.

இஷ்ரத் ஜஹான் வழக்கில் மத்திய அரசு மற்றும் மாநில அர சுக்கு உளவுத்துறை தந்த தகவல் களின் அடிப்படையில் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2009-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி நீதிபதி எஸ்.பி. தமாங் தம்முடைய அறிக்கையில், இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டதாக கூறியிருந்தார். இதுதான் குஜராத் மற்றும் பிற பகுதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல் பிரமாணப் பத்திரமானது என்கவுன்ட்டரை நியாயப்படுத்தும் வகையில் தவறாக தாக்கல் செய் யப்பட்டிருந்தது. எனவே, முதல் பிரமாணப் பத்திரம் தொடர்பாக விளக்கம் தர வேண்டிய தேவை ஏற்பட்டதால் கூடுதல் பிரமாணப் பத்திரம் 2009-ம் ஆண்டு செப் டம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்யப் பட்டது.

அதில் கூறப்பட்ட தகவல்கள், சரியாக இருந்தன. அதாவது உளவுத்துறை தந்த தகவல் களுக்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை.

துரதிருஷ்டவசமாக இவ்விவ காரம் தொடர்பாக விமர்சிப் பவர்களில் பெரும்பான்மை யானவர்கள் கூடுதல் பிரமாணப் பத்திரத்தைப் படிப்பதில் கவனம் செலுத்தவில்லை. காணாமல் போன அந்த 5 ஆவணங்களும் நான் எடுத்த நிலைப்பாட்டை நிரூபிப் பதாகவே இருக்கும்.

அட்டர்னி ஜெனரல் ஆய்வு செய்த பிறகே கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. குறைந்தது 3, 4 முறையாவது கோப்பு உள்துறை செயலாள ரின் கைக்கு வந்து சென்றிருக் கும். உச்சபட்சமாக உள்துறை செயலாளரின் உத்தரவின்பேரில் தான் நீதிமன்றத்தில் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய் யப்பட்டது. கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதற்கு நான்தான் முழு பொறுப்பு. அது மிகச்சரியான செயல்தான்.

இந்த நிலையில் பிரமாணப் பத்திரங்களை முன்வைத்து ஒரு போலியான சர்ச்சையை மத்திய அரசு உருவாக்குகிறது. இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT