பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொது மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் மீது மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர் மதுசூதன் மிஸ்திரி எழுப்பினார். அப்போது அவர், “சிலர் தங்களைத் தாங்க ளாகவே பசு காப்பாளர்கள் என அறிவித்துக்கொண்டு பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தியும் கொலை செய்தும் வருகின்றனர்” என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் குரல் எழுப்பி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
மிஸ்திரி தொடர்து பேசும்போது, “ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வாகனங்களில் பசுக்கள் ஏற்றிச் சென்ற பெலு கான் (50) என்பவர் பசு காப்பாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜஸ்தானில் அரசியல்சாசன செயல்பாடு முடங்கியுள்ளது. ராஜஸ்தான் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்றார்.
மிஸ்திரியின் குற்றச்சாட்டை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மறுத்தார். “இது உணர்வுபூர்வமான விஷயம். உறுப்பினர் சொல்வது போல் எதுவும் நடைபெறவில்லை” என்றார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் ஆவேசத்துடன் எழுந்து நாளேட்டில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு செய்தியை அவையில் காட்டினார். தொடர்ந்து அவர் பேசும்போது, “பெலு கான் தாக்கப்பட்டு இறந்ததை இந்த உலகமே அறிந்துள்ளது. ஆனால் இந்த அரசுக்கு எதுவுமே தெரியவில்லை” என்றார்.
இதையடுத்து அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், “இந்த விவகாரம் தொடர்பாக அவைக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை அரசு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். -