என்னுடை பேச்சை கேட்காவிட்டால் முஸ்லிம்கள் நலனை பாதுகாப்பதற்காக அகிலேஷ் யாதவை எதிர்த்துப் போட்டியிடுவேன் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
முலாயம் சிங்குக்கும் அவரது மகனும் உ.பி.முதல்வருமான அகிலேஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. பல முறை சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் அசம்கார் மக்களவை தொகுதி உறுப்பினருமான முலாயம் சிங் யாதவ், நேற்று தனது சகோதரர் சிவ்பால் யாதவின் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கட்சி அலுவலகத்துக்குச் சென்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அகிலேஷ் யாதவால் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நரேஷ் உத்தமும் இருந்தார். அப்போது முலாயம் சிங் கூறியதாவது:
கட்சி உடைவதைத் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. பாஜகவின் உத்தரவுப்படி செயல்பட்டு வரும் ராம்கோபால் யாதவின் கட்டளைப்படி அகிலேஷ் செயல்படுகிறார். மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக அகிலேஷ் செயல்படுகிறார்.
குறிப்பாக, மாநில காவல் துறை தலைவராக (டிஜிபி) ஒரு முஸ்லிமை நியமிக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அகிலேஷ் இதை விரும்பவில்லை.
கட்சியை வளர்த்தெடுக்க நான் பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். ஆனால், ஒரு பெண் உட்பட பல அமைச்சர்களை உரிய காரணமே இல்லாமல் பதவி நீக்கம் செய்தார்.
முஸ்லிம்களின் நலனை பாதுகாக்கும் விஷயத்தில் நான் எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன். அவர்களுக்காகவே நான் வாழ்வேன். அவர்களுக்காக உயிரையும் விடுவேன். என்னுடைய பேச்சை கேட்காவிட்டால், முஸ்லிம்களின் நலனை பாதுகாப்பதற்காக வரும் தேர்தலில் அகிலேஷை எதிர்த்து போட்டியிடவும் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.