உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏவின் மெய்காப்பாளர் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் மர்மமான முறையில் திடீரென ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷிஷாமாவோ சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். இவரின் மெய் காப்பாளராக குலாம் ஜிலானி என்பவர் பணிபுரிகிறார். இவருக்கு, மால் ரோடு எஸ்பிஐ கிளையில் வங்கிக் கணக்கு உள்ளது.
செவ்வாய் இரவு, தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க குலாம் ஏடிஎம் மையத்துக்குச் சென்றார். பணம் எடுத்த பிறகு, தனது கணக்கில் உள்ள மீதத் தொகை, ரூ.99,99,02,724 இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து எம்எல்ஏ சோலங்கியிடம் தெரிவித்தார். சோலங்கி மூலமாக கான்பூர் மாவட்ட ஆட்சியர் கவுஷல் ராஜ் சர்மாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கிக் கிளையின் துணை பொது மேலாளரிடம் பேசியதாகவும், குலாமின் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்பட்டுவிட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இப்போதைக்கு பாதுகாவலர் குலாம் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் வங்கி அதிகாரிகள் கூறிவிட்டனர். குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குலாம், கான்பூர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, எம்எல்ஏவிடம் வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.