இந்தியா

கர்நாடகாவில் டப்பிங் செய்யப்பட்ட அஜித் திரைப்படத்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: பெங்களூருவில் திரையிடப்படுவது நிறுத்தம்

இரா.வினோத்

கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட நடிகர் அஜித்குமாரின் ‘என்னை அறிந்தால்' திரைப்படத்தை திரையிடுவதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐபிஎஸ்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதன் பாடல்களும், ட்ரைலரும் ஏற்கெனவே வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.

‘சத்யதேவ் ஐபிஎஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி, ‘‘தமிழகத்தைப் போலவே நடிகர் அஜித்குமாருக்கு கர்நாடகாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ திரைப்படத்தை கர்நாடகாவில் சுமார் 100 திரையரங்குகளில் இன்று (நேற்று) வெளியிடுகிறோம். கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம், அதிக திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை'' என்றார்.

இதற்கிடையே, கர்நாடகாவில் கன்னட திரைப்படங்களை மட்டுமே திரையிட வேண்டும். டப்பிங் திரைப்படங்களை வெளியிட்டால், திரையரங்குகளைத் தீயிட்டு கொளுத்துவோம் என வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட‌ கூட்டமைப்பு, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் மிரட்டல் விடுத்திருந்தன.

பேனர்கள் கிழிப்பு

எனினும் ஏற்கெனவே திட்டமிட்டப்படி நடிகர் அஜித்குமாரின் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ திரைப்படம் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடகா முழுவதும் வெளியிடப்பட்டது. பெங்களூருவில் இந்த திரைப்படத்தை திரையிட இருந்த நட்ராஜ், சம்பங்கி உள்ளிட்ட திரையரங்குகளை வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த அஜித்குமாரின் பேனர்களை கிழித்தனர்.

இதையடுத்து பெங்களூருவில் மட்டும் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ திரைப்படம் திரையிடப்படுவது ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அஜித்குமாரின் ரசிகர்கள் கன்னட அமைப்பினருக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கன்னட அமைப்பினரைக் கைது செய்தனர்.

அதேசமயம் மங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட பிற பகுதிகளில் 60 திரையரங்குகளில் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ திரைப்படம் வெளியிடப்பட்டது.

SCROLL FOR NEXT