இந்தியா

டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு முழு ஆதரவு: காங். உறுதி

செய்திப்பிரிவு

டெல்லியில் மக்கள் நலனில் அக்கறையுடன் ஆம் ஆத்மி அரசு செயல்பாட்டால், ஐந்து ஆண்டு பதவி காலத்துக்கும் ஆதரவு நீடிக்கும் என்று காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கோரிய நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, "கேஜ்ரிவால், நீங்கள் இந்த அரசு 48 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறீர்கள்.

டெல்லி மக்களின் நலனுக்காக நீங்கள் தொடர்ந்து முடிவுகளை எடுத்தால், உங்கள் அரசுக்கு அச்சுறுத்தல் இருக்காது என்று உறுதி கூறுகிறேன்.

நீங்கள் நல்லாட்சி புரியும் பட்சத்தில், ஐந்து ஆண்டுகளுக்கும் முழுமையான பதவியில் இருப்பதற்கு முழுமையான ஆதரவைத் தருவோம். மக்களின் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் தடையாக இருக்காது.

மக்களின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் உறுதுணைபுரியும் வகையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

அதேவேளையில், நீங்கள் புதிய அரசு என்பதை மனதில் கொள்ளுங்கள். அதிகாரிகள் உங்களுக்கு உரிய முறையில் நிர்வாகம் குறித்து விவரித்திருப்பார்கள். ஏற்கெனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மானியங்களில் மாற்றம் செய்யக் கூடாது. உங்களை யாரும் தவறாக வழிநடத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதேபோல், ஊழலுக்கு எதிராகவும் நீங்கள் (கேஜ்ரிவால்) உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார் காங்கிரஸ் தலைவர் லவ்லி.

SCROLL FOR NEXT