உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டின் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இமயமலை தொடரில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் மூடப்படும் இக்கோயில் கோடை கால தொடக்கத்தில்தான் திறக்கப்படுகிறது. அதன்படி 6 மாதங்களுக்குப் பின் தலைமை அர்ச்சகர் ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி நேற்று அதிகாலை 4.25 மணிக்கு கோயில் நடையை திறந்து வைத்து விளக்கேற்றினார். அப்போது அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்கநாதம் எழுப்பி இறைவனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து காலை 8.25 மணிக்கு கோயிலுக்கு வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மாசனத்தில் அமர்ந்திருந்த பத்ரி நாராயணரை தரிசித்தார். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் நடத்திய சிறப்பு பூஜையில் பங்கேற்று நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். அவருடன் உத்தராகண்ட் ஆளுநர் கே.கே.பால், முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் மற்றும் மாநில சுற்றுலா துறை அமைச்சர் சத்பால் மகாராஜ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
சுமார் 45 நிமிடம் வரை பூஜையில் அமர்ந்திருந்த பிரணாப் முகர்ஜி, காலை 10.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஜாலிகிராண்ட் விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
பத்ரிநாத் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து சார்தாம் புனித யாத்திரை நேற்று முதல் முழுமையாக தொடங்கியது. பிற கோயில்களான கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை ஏற்கெனவே திறக்கப்பட்டு விட்டன.
கேதார்நாத் கோயிலில் கடந்த 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார் என் பது குறிப்பிடத்தக்கது.