நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநில மறு சீரமைப்பு மசோதா தாக்கல் செய்வதை எதிர்த்து வியாழக்கிழமை நடந்த முழு அடைப்புப் போராட்டம் காரணமாக சீமாந்திரா முற்றிலுமாக ஸ்தம்பித்தது.
மாநிலத்தை பிரிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தெலங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை எதிர்த்தும் சீமாந்திரா பகுதியில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். இந்த போராட்டத்துக்கு ஆளும் கட்சியான காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள், கட்சி பாகுபாடின்றி ஆதரவு தெரிவித்தன.
போராட்டம் காரணமாக, சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் அரசு, தனியார் பஸ்கள் ஆட்டோக்கள் இயங்க வில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கடைகள் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டன. வங்கிகளும் இயங்கவில்லை. அரசு, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. மத்திய அரசு அலுவலகங்களான தபால் நிலையங்கள், பி.எஸ்.என்.எல் அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டதால் அவையும் மூடப்பட்டன.
அரசு ஊழியர்கள், மாணவர் சங்கத்தினர் வணிகர் சங்கத்தினர், மகளிர் அமைப்பினர், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சீமாந்திரா மாவட்டங்களில் மறியல், தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பஸ்கள் ஆட்டோக்கள் இயங்காததால், பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்தனர். இதனால் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. பக்தர் களின் வசதிக்காக திருப்பதியில் மட்டும் திருமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வியாழக்கிழமை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடந்ததால், ஆந்திர எல்லைகளில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வெளி மாநில பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழக-ஆந்திர எல்லையான சத்தியவேடு, ஊத்துக்கோட்டை, புத்தூர், சித்தூர், பலமனேர், வி.கோட்டா ஆகிய பகுதிகளிலும், ஆந்திர-கர்நாடக எல்லையான நங்கிலி, குப்பம், ராமசமுத்திரம் போன்ற இடங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு சென்ற பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். சீமாந்திரா மாவட்டம் முழுவதும் இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சித்தூரில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.