மத்தியப் பிரதேச மாநிலத்தில் குகை பகுதியில் புகுந்த வாலிபரை அதில் இருந்த இரு புலிகள் தாக்காமல் உயிருடன் விட்டுவிட்டன. குவாலியரின் விலங்கியல் பூங்காவில் நடந்த செவ்வாய்கிழமை மாலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவாலியர் நகரில் உள்ளது காந்தி விலங்கியல் பூங்கா. இதில் ஒரு ஆண் மற்றும் பெண் புலி சிறிய மைதானத்துடன் கூடிய குகைக்குள் வைக்கப் பட்டுள்ளன. தனியார் பொறி யியல் கல்லூரி மாணவரான யொஷோனந்தா கௌஷிக் என்பவர் திடீரென அப்பகு திக்குள் நுழைந்தார். தனது மேல் சட்டையை கழற்றி வீசி எறிந்த அவர், குகை முன்பு நின்றபடி, ‘ஏய் புலிகளே தைரியம் இருந்தால் வெளியில் வாருங்கள், என்னிடம் மோதிப் பாருங்கள்’ என்று குரல் கொடுத்தார்.
பிறகு குகைக்கு முன்பிருந்த ஒரு மேடையில் அமர்ந்து கொண்டும் சத்தம் போட்டார். அப்போது ஒரே ஒரு முறை மட்டும் இளைஞன் அருகில் வந்த புலி, ஏனோ அவரை கண்டுகொள்ளாமல் மீண்டும் குகைக்குள் சென்றுவிட்டது. இதைக் கண்டு மீண்டும் அந்த இளைஞர் சுமார் முக்கால் மணி நேரம் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தார். இதை மேலே உள்ள பாலத்திலிருந்து பார்த்த பொதுமக்கள், இளைஞனை மேலே வந்துவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் சிறிதும் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே, கௌஷிக் மனநலம் குன்றியவர் எனக் கூறப்பட்டது. இதனால், பூங்கா பணியாளர்களுக்கு தகவல் தரப்பட்டு அங்கு வந்தவர்கள் முதலில் புலியின் கூண்டை அடைத்தனர். பிறகு இளைஞனை மீட்டு அருகிலுள்ள நகர காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.
இதுகுறித்து அந்த காவல் நிலைய அதிகாரி உக்கம் சிங் 'தி இந்து'விடம் கூறுகையில், "இதற்காக, அந்த இளைஞன் மீது தற்கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்ய இருந்தோம். ஆனால், அவரது பெற்றோரை அழைத்து பேசியபோது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது" எனக் கூறினார்.
இதன் காரணமாக, அவரை நேராக மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ப்பதாக கௌஷிக்கின் பெற்றோரிடம் எழுத்து மூலமாக வாக்குமூலம் பெற்று அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுபற்றி விலங்கியல் பூங்காவினர் கூறுகையில், "அன்றையதினம் புலி வயிறு நிறைய பகலிலேயே சாப்பிட்டு விட்டதால் அதிர்ஷ்டவசமாக எதுவும் செய்யவில்லை. பசி நேரமாக இருந்தால் கண்டிப்பாக அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்கும்" என்றனர்.