இந்தியா

இறந்துபோன ராணுவ வீரர் உயிருடன் திரும்பி வந்தார்: திகில் திரைப்படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்

பிடிஐ

கார் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் ஒருவர், 7 ஆண்டுகளுக்குப் பிறகு உயி ருடன் வந்து நின்ற சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பெஹ்ரார் நகரைச் சேர்ந்த தரம்வீர் யாதவ், 2009-ம் ஆண்டு டேராடூனில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். ராணுவ வீரரான அவர் இறந்தது உறுதி யாகி, குடும்ப ஓய்வூதியத் தொகை யும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று பெஹ்ராரில் உள்ள தனது வீட்டின் முன், தரம்வீர் யாதவ் திடீரென வந்து நின்றார். இரவு நேரத்தில் தரம்வீர் கதவைத் தட்டி குரல் எழுப்பியபோது அவரின் தந்தை கைலாஷ் முதலில் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், ‘தொடர்ந்து கதவு தட்டும் சத்தம் கேட்டபோது, வாசலை நோக்கி ஓடினேன். இறந்துவிட்டான் என இத்தனை நாளாக நினைத்துக்கொண்டிருந்த என் மகன் உயிருடன் நின்றிருந்தான். எனக்கு பேச்சே வரவில்லை. பெரிய மகனும், மருமகளும் தான் தரம்வீரை உள்ளே அழைத்துவந்தனர்’ என, தந்தை கைலாஷ் கூறினார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்திடம் இருந்து பிரித்த அதே விபத்து, தரம்வீரை மீண்டும் குடும்பத்துடன் இணைத்துள்ளது. டேராடூன் கார் விபத்தில் தரம்வீர் இறந்ததாக தவறாக முடிவு செய்யப்பட்டது. அந்த விபத்தில் அவர் உயிர் பிழைத்தாலும், சுயநினைவை இழந்துவிட்டார்.

ஹரித்வார் பகுதியில் சுற்றித் திரிந்த தரம்வீர் மீது, கடந்த வாரம் இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் லேசான காயம் ஏற்பட்டாலும், தரம்வீருக்கு சுயநினைவு திரும்பிவிட்டது. விபத்து ஏற்படுத்தியவரிடம் ரூ.500 பெற்றுக்கொண்டு, பேருந்து மூலம், வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார் தரம்வீர்.

‘நடந்ததெல்லாம் ஒரு திகில் திரைப்படம் போலவே உள்ளது’ என, தரம்வீரின் தந்தை கைலாஷ் கூறினார். இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட ராணுவ வீரர்கள் நல அதிகாரி ஆர்.பி.யாதவ், தரம்வீருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT