அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அமெரிக்காவின் வேலை, அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தார். மேலும் இந்தியர்கள் மீதான இனவெறி குற்றங்கள், வன்முறை சம்பவங்கள் அமெரிக்காவில் பரவி வருகின்றன. இதனால் இதுவரை வரை அமெரிக்க மாப்பிள்ளைக்கு வலைவீசி வந்த இந்திய பெண்களின் பெற்றோர்கள், தற்போது அந்த மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக வெளி நாட்டில் வேலை செய்யும் அல்லது என்ஆர்ஐ மாப்பிள்ளை தொடர் பான வரன் தேடல் 25 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்திருப்பதாக திருமண வரனுக்கான ஷாதி டாட் காம் என்ற இணையதளத்தின் மேலாளர் ரிச்சா கர்க் தெரிவித்துள்ளார். அவர், ‘‘கடந்த 2 மாதங்களாக அமெரிக்க மாப்பிள்ளைக்கான வரன் தேடுதல் கணிசமாக குறைந்துள்ளது. நவம்பர் மாதம் முதலே வீழ்ச்சி தொடங்கினாலும், பிப்ரவரியில் மிக அதிக அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
தெற்கு டெல்லியில் உள்ள ஒரு திருமண வரன் மையத்தின் துணைத் தலைவர் நித்தி ஜா கூறும்போது, ‘‘என்ஆர்ஐ மாப்பிள்ளைக்கான தேடல்கள் இனிமேலும் தொடராது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய குடியுரிமை கொள்கைகளைக் கண்டு, இந்தியப் பெண்களின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். தவிர அங்கு பெருகிவரும் இனவெறி சம்பவங்களும் அவர்களை அச்சப்பட வைத்துள்ளது’’ என்றார்.
டெக்சாஸ் மாகாணத்தில் பெரும் பணக்காரராக உள்ள தனது உறவினருக்காக இந்தியாவில் பெண் தேடிவரும் ரியல் எஸ்டேட் முகவரான பங்கஜ் மல்ஹோத்ரா கூறும்போது, ‘‘உறவினருக்காக ஏராளமான வரன் தேடினோம். ஆனால் அனைவருமே ஒரே குரலாக மாப்பிள்ளை இந்தியா வுக்கு வந்தால் திருமணத்துக்கு சம்மதிப்பதாக தெரிவித்துவிட்டனர். அமெரிக்காவில் வாழ விருப்பம் இல்லை என அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்கிறார்.
ராயல் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் இணை நிறுவனரான கவுரவ் சப்ராவும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். ‘‘ஜனவரி மாதம் முதல் அமெரிக்க மாப்பிள்ளையை வரனாக தேடும் பெற்றோர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை சரிந்துவிட்டது. திடீரென நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றார்.
மத்திய டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரான விஜய் சிங் தனது மகளுக்காக கடந்த ஓராண்டாக அமெரிக்க மாப்பிள்ளையைத் தேடி வந்துள்ளார். ஆனால் அந்த எண்ணத்தை தற்போது அவர் மாற்றிக் கொண்டதாகவும், இந்தியா வர விரும்பும் மாப்பிள்ளைக்கே தனது பெண்ணைத் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்ப தாகவும் தெரிவித்துள்ளார்.
இயல்பானது தான்
அமெரிக்க மாப்பிள்ளை மீதான மவுசு குறைந்தது குறித்து சென்னையைச் சேர்ந்த பாரத் மேட்ரிமோனி நிறுவனர் ஜ.முருகவேலிடம் கேட்டபோது, ‘‘வழக்கமாக ஒரு நாட்டில் பிரச்சினை ஏற்படும்போது, என்ஆர்ஐ இளைஞர்களைத் திருமணம் செய்துக்கொள்வதை இந்திய பெண்கள் தவிர்ப்பது இயல்பானது தான். எனவே அமெரிக்க மாப்பிள்ளைகளை இந்தியப் பெண்களும், அவர்களின் பெற்றோரும் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளது’’ என்றார்.