இந்தியா

டெல்லியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர் கைது: 13 ஆண்டுகளில் 2,500 குழந்தைகளை துன்புறுத்தியதாக ஒப்புதல்

செய்திப்பிரிவு

பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு டெல்லி, அசோக்நகர் போலீஸாரிடம் கடந்த டிசம்பர் 13-ம் தேதி, 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக புகார் வந்தது. இது தொடர்பாக போலீஸார் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 12-ம் தேதி, பள்ளி ஒன்றின் முன்பாக அடுத்தடுத்து இரு குழந்தைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்திய தாக ஒருநபரை பிடிக்கும் முயற்சி நடந்தது. ஆனால் குற்றவாளி அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதன் பிறகு தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிய போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். இதன் அடிப்படையில் டெல்லியின் கொண்டி என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு சுனில் ரஸ்தோகி (38) என்பவரை பிடித்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபூரை சேர்ந்த சுனில் ரஸ்தோகி, டெல்லியில் தையல் கடை வைத்திருந்த தனது தந்தையுடன் 1990 முதல் தங்கியுள்ளார். பிறகு டெல்லியின் மயூர் விஹார் குடிசைப் பகுதிக்கு மாறி, அங்கு தையல் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது, சுனிலுக்கு 8 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீது மோகம் கொள்ளும் ஒருவகை நோய் தொற்றியுள்ளது. இது ஆங்கிலத்தில் Paedophile என்று கூறப்படுகிறது. மயூர் விஹார் பகுதியில் அவ்வப்போது குற்றத்தில் ஈடுபட்டு வந்த சுனில் யாரிடமும் சிக்கவில்லை. ஆனால் தனது பூர்வீக சொத்தை விற்க ருத்ரபூர் சென்றபோது, 10 வயது சிறுமியை துன்புறுத்தி கைதானார். இதில் 6 மாத சிறைக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தவர் திருந்தியபாடில்லை. இதனால் மயூர் விஹார் பகுதியில் இருந்து குடும்பத்துடன் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு மணமாகி 3 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளன. பிறகு குடும்பத்துடன் டெல்லியின் திரிலோக்புரி, கோடா, கல்யாண்புரி ஆகிய பகுதிக்கு மாறியவர் கடைசியில் ருத்ரபூர் சென்று தையல் தொழில் செய்து வந்துள்ளார். எனினும் பாலியல் குற்றத்தை இவர் கைவிடவில்லை. இதற்காக, மாதம் இருமுறை டெல்லிக்கு ரயிலில் வந்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது அசோக்நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுனில், கடந்த 13 ஆண்டுகளில் சுமார் 2,500 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாகக் கூறி அதிர வைத்துள்ளார்.

இதுகுறித்து கிழக்கு டெல்லிக் கான காவல்துறை துணை ஆணையர் ஓம்வீர்சிங் பிஷ்னோய் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ருத்ரபூர், டெல்லி, காஜியாபாத் ஆகிய இடங்களில் சுனில் மீது திருட்டு, போதைப் பொருள் புழக்கம் உட்பட பல்வேறு பிரிவு களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இவர் 50 வழக்குகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக் கிறோம். குழந்தைகளிடம் சென்று அவர்கள் பெற்றோர் அழைத்து வரச் சொன்னதாகக் கூறியும், சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்து ஏமாற்றியும் தனி இடங்களுக்கு அழைத்துச் சென்று குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.

SCROLL FOR NEXT