சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தமிழக முதல்வர் ஆக முடியாமல் போனது. என்றாலும் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவியை அங்கீகரிப்பதற்காக சில விளக்கங்கள் கேட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இத்துடன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.யின் புகார் மீதும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கான பதில் அதிமுக சார்பில் இன்னும் அனுப்பப்படாததால், சசிகலாவின் பதவியை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவைத்தலைவர் மதுசூதனனும் நீக்கல் உத்தரவை எதிர்த்து சசிகலா மீது புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது, சசிகலா மீதான வழக்கின் தீர்ப்புக்கு பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என தேர்தல் ஆணையம் கருதியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “மதுசூதனன் அளித்த புகார் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது தீர்ப்பு வெளியான நிலையில், இதன்பிறகு கட்சியின் நிகழும் மாற்றங்கள் குறித்து வரும் புகார்கள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அதிமுகவிடம் இருந்து பதில் வந்த பிறகே, சசிகலாவின் பதவி அங்கீகரிக்கப்படும். தண்டனைக்கும் பிறகும் சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் பதவி வகிக்க அக்கட்சியின் சட்டதிட்டங்கள் அனுமதித்தால், அவர் அப்பதவியில் தொடரலாம். ஆனால் முதல்வர் ஆக முடியாது. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் ஆளுநர் எடுக்கும் முடிவில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் அதுகுறித்து புகார் அளித்தால், அவரது நீக்கம் செல்லுமா என பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
நீதிமன்ற தீர்ப்பால் தற்போது சசிகலா பாதிக்கப்பட்டதை போல, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் முன்பு பாதிக்கப்பட்டார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு தனது எம்.பி. பதவியை இழந்தார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள லாலு, ஜாமீனில் இருந்துகொண்டு, தனது கட்சியின் தலைவராக தொடர்கிறார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை அனுபவிக்க வேண்டியிருப்பதால், சிறையில் இருந்துகொண்டு கட்சியை நிர்வகிக்க முடியுமா எனத் தெரியவில்லை.
கடந்த டிசம்பர் 29-ல் நடை பெற்ற அதிமுக அவசரப் பொதுக் குழுக் கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவிக்கு முன் மொழிந்தவர் மதுசூதனன். இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அதிமுகவின் சட்டதிட்டங்களின்படி சசிகலா பொதுச்செயலாளர் ஆக முடியாது என கூறியுள்ளார். இதே புகாரை சசிகலா புஷ்பா எம்.பி.யும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.