இந்தியா

ஹுத்ஹுத் புயல் பாதிப்பு: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆய்வு

பிடிஐ

ஆந்திராவில் ஹுத்ஹுத் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வான்வழியே ஆய்வு செய்தார்.

ஆந்திராவில் ஞாயிறு அன்று கரையை கடந்த ஹுத்ஹுத் புயல், நிலச்சரிவு பேன்ற இயற்கை சீற்றங்களால் அங்கு 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பட்ட பகுதிகளை முதல்வர் சந்திர பாபு நாயுடு, நிதி அமைச்சர் ராமகிருஷ்ணடு ஆகியோர் திங்கட்கிழமை அன்று வான்வழியே ஆய்வு மேற்கொண்டனர்.

பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

தேசிய பேரிடர் மேலாண்மை குழு அறிக்கைப்படி, ஹுத்ஹுத் புயலுக்கு ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். ஸ்ரீகாகுலம், விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆந்திர மாநில ஆலோசகர் பரக்காலா பிரபாகரன் கூறும்போது, "சுமார் 5 லட்சம் பேர் பல்வேறு பகுதிகளிலுருந்து அரசு ஏற்படுத்தி தந்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அடிப்படை உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் அதனை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர ஸ்ரீகாகுலம் மற்றும் ராஜ்முந்ரி ஆகிய பகுதிகளின் தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டது. அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT