கர்நாடக மாநிலம் மைசூருவில் மாட்டிறைச்சி உணவு திருவிழா நடத்தினால் தாக்குதல் நடத்துவோம். எனவே அந்த நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கர்நாடக தலித் நல அமைப்பும், ''உண்மை குரல்'' நாளிதழும் இணைந்து மாட்டிறைச்சி உணவு திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளன. அங்குள்ள டவுன் ஹாலில் இன்று நடைபெறும் மாட்டிறைச்சி உணவு திருவிழாவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீராம் சேனா, பஜ்ரங் தளம், நவநிர்மாண் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் மைசூருவில் மாட்டிறைச்சி உணவு திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து மைசூருவில் முக்கிய இடங்களிலும், டவுன் ஹால் பகுதியிலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில், இந்துக்களின் தெய்வமான மாட்டைக் கொன்று சாப்பிடுவதை அனுமதிக்க முடியாது. இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமான மாட்டிறைச்சி உணவு திருவிழாவை நடத்தினால் தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக உண்மை குரல் நாளிதழின் ஆசிரியரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான சாந்த ராஜூ கூறும்போது, “மனிதனின் உணவை அரசோ, அமைப்புகளோ தீர்மானிக்க முடியாது. தலித் மற்றும் முஸ்லிம்களின் உணவை எதிர்க்கும் இந்துத்துவா அமைப்பு களை வன்மையாக கண்டிக்கி றோம். எனவே இந்த நிகழ்வுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்றார்.