இந்தியா

அடுத்த கட்டத்தை நோக்கி கறுப்புப் பணத்துக்கு எதிரான போர்: ஒத்துழைப்பு அளிக்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பிடிஐ

கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை பொது மக்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய வானொலியில் இந்த மாதத்துக்கான மனதில் இருந்து (மன் கீ பாத்) நிகழ்ச்சிக் காக பிரதமர் மோடி நேற்று உரை யாற்றினார். அப்போது ‘புதிய இந்தியா’வை கட்டமைப்பது தொடர்பாக பேசிய அவர், இதற்காக 125 கோடி இந்தியர்களும் உறுதிமொழி ஏற்று, ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் பேசியதாவது:

கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ரொக்க பயன்பாட்டை குறைப்பதில் நாம் அதிகளவில் பங்களிக்க வேண்டும். பள்ளி கட்டணம், மருந்து பொருட்கள், நியாய விலைக் கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள், ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு என அனைத்துக்கும் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துங்கள்.

இந்த வகையில் கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போரில் நீங்கள் எத்தகைய துணிச்சல் மிக்க வீரராக மாறுகிறீர்கள் என்பதையும் அறிய மாட்டீர்கள்.

இந்த ஆண்டு 2,500 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பரிவர்த்தனை கள் நடக்க வேண்டும் என பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 125 கோடி மக்களும் நினைத்தால் இந்த இலக்கை 6 மாதங்களில் அடைந்துவிடலாம்.

மக்கள் டிஜிட்டல் பரிவர்த்த னையை செய்வது எப்படி என்பதை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். ரொக்கமில்லா பரிவர்த்தனை களுக்கு இரண்டரை மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பீம் செயலியை ஒன்றரை கோடி மக்கள் தரவிறக்கம் செய்துள்ளனர்.

சுதந்திர தினம் கொண்டாடும் வங்கதேச மக்களுக்கு வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சியை எட்ட இரு நாடுகளும் பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேறுகால விடுமுறை

பணியாற்றும் பெண்களுக்கு பேறுகால விடுமுறை முன்பு 12 வாரங்கள் அளிக்கப்பட்டிருந்தது. அதனை 26 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. நாட்டின் எதிர்கால குடிமகனுக்கு பிறப்பு முதலே தாயின் முழு அன்பும், அரவணைப்பும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

புதிய இந்தியா கட்டமைக்கும் திட்டம் என்பது அரசு திட்டமோ, அல்லது ஒரு அரசியல் கட்சியின் திட்டமோ அல்ல. ஒவ்வொரு குடிமகனும் தனது சமூக பொறுப்பு மற்றும் கடமைகளை உணர்ந்து செயலாற்ற வேண்டிய திட்டம். அப்போது தான் புதிய இந்தியா திட்டத்துக்கு நல்ல தொடக்கம் அமையும். 125 கோடி மக்களும் புதிய இந்தியாவை நோக்கி ஒற்றுமையுடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்றால், அந்த கனவு நிச்சயம் பலிதமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT