பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அவரே கட்சியின் முதல்வர் வேட்பாளராக உள்ளார். தேர்தல் வெற்றிக்கு பிறகு கட்சி எம்எல்ஏ அல்லது எம்எல்சி ஒருவரை ராஜினாமா செய்யவைத்து, சட்டமன்ற உறுப்பினர் ஆக அவர் திட்டமிட்டுள்ளார்.
உ.பி.யில் வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களில் ஒருவராக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளார். ஆனால் உ.பி.யின் 403 தொகுதிகளில் எதிலுமே இவர் போட்டியிடவில்லை. இதுவரை 401 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத் தால் மாயாவதி முதல்வராக தேர்வு செய்யப்படுவார். மாயாவதி தற்போது நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொருளாளர் அம்பேத்ராஜன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “உ.பி.யில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடுவதால் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கான பொறுப்பு பெஹன்ஜியின் (சகோதரியின்) தோளில் உள்ளது. வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதால் இத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் வெற்றிக்கு பிறகு, அவரே முதல்வராக தேர்வு செய்யப்படு வார். கடந்த 1997 மற்றும் 2002-ல் நடந்த உ.பி. தேர்தலில் ஒரே சமயத்தில் 2 தொகுதிகளில் நின்று அவர் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றார்” என்றார்.
உ.பி.யில் நான்கு முறை ஆட்சியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியத் தலைவராக 60 வயது மாயாவதி விளங்குகிறார். அவருக்கு சரிநிகரான தலைவர்கள் எவரும் கட்சியில் இல்லை. பிரச்சார மேடைகளிலும் மாயாவதியை தவிர அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் முக்கியத்துவம் கிடைப்பதில்லை.
தலித்துகளை மையமாக வைத்து செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி அச்சமூகத்தின் முதலாவது உ.பி. முதல்வர் ஆவார். இவரது குடும்பத்தார் எவரும் கட்சிப் பொறுப்புகளில் இல்லை. இவர்கள் தேர்தல்களில் போட்டியிட்டதும் இல்லை. கடந்த 1995-ல் மாயாவதி முதல்முறையாக உ.பி. முதல்வரானார். இப்பதவிக்கு வந்த பிறகே அவர் எம்எல்ஏ ஆனார். பிறகு 2007 சட்டப்பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிடாமல் முதல்வர் ஆனார்.
சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதி போட்டியிட்டால் அவரது தொகுதியை சுற்றி யுள்ள தொகுதிகளிலும் அதன் தாக்கம் இருப்பதாகவும் அவர் போட்டியிடாவிட்டால் சில தொகுதிகளில் இழப்பு ஏற்படு வதாகவும் கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.