சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின்படி, அடுத்த கல்வியாண்டு முதல் உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் நேற்று கூறியதாவது:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா நிறைவேற்றப் பட்டது. இது அரசிதழில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது. இந்த சட்டத்தை விரைந்து அமல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. இது தொடர்பான விதிமுறைகளை வரும் ஏப்ரல் 14-ம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் உரிமை தொடர்பான ஐநா உடன்படிக்கை யின் அடிப்படையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான இந்த சட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு வேலையில் மாற்றுத் திற னாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 3-லிருந்து 4 சதவீதமாக வும் உயர் கல்வி நிறுவனங்களில் 3-லிருந்து 5 சதவீதமாகவும் உயர்த்த இந்த சட்டம் வகை செய்கிறது.
மேலும் மாற்றுத் திறனாளிகளை தாக்குதல், அவமதித்தல், உணவு வழங்க மறுத்தல் ஆகிய செயலில் ஈடுபடுவோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.