ஜிஎஸ்டி வரியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு விலக்கு அளிக்கும்படி மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 30-ம் தேதி நடக்கும் இறுதிக் கட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை) வரி அமலுக்கு வருகிறது. இதன் மூலம் லட்டு தயாரிப்பு, அன்னதானத்துக்கான உணவுப் பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றுக்கு தேவஸ்தானம் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் தற்போது ரூ.25-க்கு விற்கப்படும் கூடுதல் லட்டு விலை ரூ.50-க்கு விற்கப்படலாம் என்பதால் பக்தர்கள் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது. தவிர தங்கும் அறைகளின் கட்டணம், சொகுசு விடுதிகளின் கட்டணமும் உயரக்கூடும். பாதிப்பில் இருந்து பக்தர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால், அதனால் ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை தேவஸ்தானத்தின் மீதே விழும்.
தவிர அன்னதான திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதிலும் தேவஸ் தானத்துக்கு சங்கடங்கள் ஏற்படலாம்.
இதை கருத்தில் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கும்படி கேட்டு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக் கும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் தேவஸ்தானம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக வரும் 30-ம் தேதி டெல்லியில் நடக்கும் இறுதிக் கட்ட ஆலோசனை கூட்டத்தின்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.