இந்தியா

பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை பஞ்சாபுக்குக் கொண்டு வருவோம்: பிரதமர் மோடி உறுதி

பிடிஐ

பஞ்சாப் தேர்தலையொட்டி ஜலந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது பாகிஸ்தானுக்கு வீணாகச் செல்லும் சிந்து நதி நீரை மீண்டும் பஞ்சாப்புக்கே கொண்டு வருவோம் என்று உறுதியளித்தார்.

மேலும் அவர் தனது உரையில், காங்கிரஸ் கட்சி மீது கடும் விமர்சனங்களை வைத்த போது, காங்கிரஸ் என்பது கடந்த காலமாகிவிட்டது என்றும், அது ஒரு மூழ்கும் கப்பல் அதில் ஏறினால் எங்கும் செல்ல முடியாது என்று சாடியுள்ளார்.

மேலும் சர்ச்சைக்குரிய சட்லெஜ்-யமுனா கால்வாய் விவகாரத்தைத் தொட்டு பேசிய மோடி, பாசனத்திற்காக இந்த நீரைப் பயன்படுத்த பஞ்சாப் மக்களுக்கு உரிமை உண்டு என்றார். மேலும் பாகிஸ்தானுக்கு வீணாகச் செல்லும் சிந்து நதி நீரை பஞ்சாப்புக்குக் கொண்டு வருவோம் என்றார்.

ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பஞ்சாப் இளைஞர்களின் போதை அடிமைப் பழக்கத்தை குறிப்பிட்டு பேசினார், அதற்கு பதிலடியாக மோடி கூறும்போது, “பஞ்சாப் இளைஞர்களுக்குக் களங்கம் கற்பிக்கும் புதிய அரசியல் கீழ்த்தரத்தை சில அரசியல்வாதிகள் கையாள்கின்றனர், பஞ்சாப் மக்களின் நேர்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய கருத்துப் பரவலுக்குக் காரணமானவர்களுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகற்ற வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தண்ணீர் போன்றது தங்கள் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப புதிய வடிவங்களை அது எடுக்கும். அதுவொரு விசித்திரமான கட்சி. மேற்கு வங்கத்தில் தன்னைத் தக்கவைக்க இடதுசாரிகளுடன் கைகோர்த்ததுதான் காங்கிரஸ். அவர்கள் எந்த தொகுதியைக் கொடுத்தாலும் ஒப்புக் கொண்டது. உ.பி.யில் சமாஜ்வாதிக் கட்சியை காங்கிரஸ் தாக்கிப் பேசியது. ஆனால் பிறகு தேர்தல் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறது. சமாஜ்வாதியின் உட்கட்சிப் பூசலை தங்களுக்கான வாய்ப்பாக காங்கிரஸ் பார்க்கிறது.

காங்கிரஸின் கோட்டையே அரசியல் சந்தர்பவாதம்தான். 70 ஆண்டுகளாக சீரழிவின் அரசியலை நாம் பார்த்து விட்டோம், தற்போது வளர்ச்சிக்கான புதிய அரசியலைக் கொண்டுள்ளோம்.

பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகே நிறைய அராஜகங்களை நான் சந்தித்து வருகிறேன். நான் மோடி, அராஜகங்களுக்கு எதிராக அடிபணிய மாட்டேன். ஊழலுக்கு எதிரான எனது வேட்கை நாட்டை கறுப்புப்பணத்திலிருந்து அகற்றும் அரசியலற்ற செயல்பாடாகும். ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக சட்ட விரோத சொத்துகளை குவித்தவர்கள் என்னைத் தாக்கி பேசுகின்றனர், அவர்களால் எனது முடிவை சீரணிக்க முடியவில்லை”, என்று பேசினார் மோடி.

SCROLL FOR NEXT