தேசிய அரசியலில் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் முக்கிய தேர்தல் என்பதால், பிரதமர் நரேந்திர மோடிக்கு இது ஒரு சோதனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி டெல்லியில் நேற்று அறிவித்தார். அப்போது தேர்தல் ஆணையர்க ளான ஏ.கே.ஜோதி, ஓ.பி. ராவத் ஆகியோர் உடன் இருந்தனர். நசிம் ஜைதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறும்.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக வாக்குப்பதிவு நடை பெறும். அதாவது பிப்ரவரி 11 (73 தொகுதிகள்), 15 (67), 19 (69), 23 (53), 27 (52), மார்ச் 4 (49), 8 (40) ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
பஞ்சாப் (117 தொகுதிகள்) மற்றும் கோவா (40) மாநில சட்டப்பேரவைகளுக்கு பிப்ரவரி 4-ம் தேதியும் உத்தராகண்டில் (70) பிப்ரவரி 15-ம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மணிப்பூர் மாநிலத்தில் மார்ச் 4 (38 தொகுதிகள்), மார்ச் 8 (22) என 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்படும். மொத்தம் 690 தொகுதி களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் 16 கோடிக்கும் மேற்பட் டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள் ளனர். இதில் 113 தொகுதிகள் எஸ்சி பிரிவினருக்கும் 23 தொகுதிகள் எஸ்டி இனத்தவருக்கும் ஒதுக்கப் பட்டுள்ளன. இதற்காக மொத்தம் 1.85 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த 2012-ல் நடந்த தேர்தலைவிட 15 சதவீதம் அதிகம் ஆகும்.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இது அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, மத்திய, தேர்தல் நடைபெறும் மாநில அரசுகளுக்கும் பொருந்தும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனியாக வங்கிக் கணக்கை தொடங்கி அதன் மூலம் செலவை செய்ய வேண்டும். ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட செலவு காசோலை மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இதுபோல ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடையையும் காசோலை மூலம் மட்டுமே பெற வேண்டும்.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாபில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தலா ரூ.28 லட்சம் வரையிலும் கோவா, மணிப்பூரில் போட்டியிடுவோர் தலா ரூ.20 லட்சம் வரையிலும் செலவு செய்யலாம்.
மேலும் முதன்முறையாக வேட்பு மனு தாக்கலின்போது மற்றொரு பிரமாண பத்திரத்தையும் வேட் பாளர்கள் கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும். அதாவது அரசுக்கு செலுத்த வேண்டிய மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டணங்கள் பாக்கி இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரண மாக இந்த முறை, தேர்தலில் கறுப்புப் பணம் பயன்படுத்தப்படு வது குறையும் என்று எதிர்பார்க் கிறோம். ஆனால் இதர சட்ட விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கள் தொகுதிக்கு வெளியே பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், இணையதளம் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. எனினும் இப்போது இந்த வசதியை சில தொகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த முறை புதுச்சேரி இடைத்தேர்தலின்போது சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது.
மகளிர் வாக்குப்பதிவு மையங்கள்
தேர்தல் நிர்வாக நடைமுறை களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகை யில், சில இடங்களில் அனைத்து மகளிர் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். இவற்றில் பெண் அலுவலர்கள் மட்டுமே இருப்பர். மேலும் மாற்றுத் திறனாளிக்கு தேவையான வசதிகளும் வாக்குப் பதிவு மையங்களில் செய்யப்படும்.
முந்தைய தேர்தலின்போது பெறப்பட்ட புகார்களின் அடிப்படை யில், இந்த முறை வாக்களிக்கும் இடத்தில் உள்ள மறைப்புகளின் உயரம் 30 அங்குலம் உயர்த்தப் படும். இதனால் வாக்காளர்கள் உடலின் மேற்பகுதி மறைக்கப்படு வதுடன் அவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என மற்றவர்கள் பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.