வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாககியும், நிரந்தர பான் எண் பெற ஆதாரை அவசியமாக்கியும் கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது.
பான் எண்ணை இணைப்பதன் மூலம் போலி பான் எண் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க முடியும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "ஆதார் கட்டாயமல்ல என நாங்கள் உத்தரவு பிறப்பித்திருக்கும்போது நீங்கள் (மத்திய அரசு) எப்படி அதை கட்டாயமாக்கி உத்தரவிட முடியும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் ஏன் கட்டாயம் என்பதை அரசு விளக்க வேண்டும்" என்றனர்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பில் ஆஜரான அடர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, "அண்மையில் ஷெல் நிறுவனங்கள் வாயிலாக நடைபெற்ற வரி ஏய்ப்பு பின்னணியில் போலி பான் எண்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.
இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.