இந்தியா

2ஜி ஆவணம் பெற அவகாசம் கோரிய சுவாமி: தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நாடாளு மன்றக் கூட்டு குழுவிற்கு ஆ.ராசா அளித்த விளக்கக் கடிதம் தொடர்பாக மேலும் சில ஆவணங் கள் கிடைக்க வேண்டியுள்ளது. அந்த ஆவணங்கள் கிடைத்த பின்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நீதி மன்றம் ஏற்றுகொண்டது.

2ஜி அலைக்கற்றை முறை கேட்டை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி) விசாரித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் தனது தரப்பு விளக்கத்தையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஆ.ராசா விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால், அவரின் விளக்கக் கடிதத்தில் இருந்த கருத்துகள், ஜே.பி.சி.யின் இறுதி அறிக்கையில் இடம் பெறவில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை முழுமை பெற வேண்டுமானால், ஜே.பி.சிக்கு ஆ.ராசா அனுப்பிய விளக்கக் கடிதம் தொடர்பான ஆவணங் களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சுப்பிர மணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி வாதிடுகையில், “இந்த வழக்கில் நான் வாதாடுவதற்கு தேவையான ஆவணங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனவே, கால அவகாசம் தேவை.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சில முக்கிய ஆவணங் கள் எனக்கு கிடைத்துள்ளன. நிதி அமைச்சக அதிகாரிகள் சிந்து குல்லர், சியாமளா சுக்லா ஆகியோரை சாட்சிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தும் வகை யிலான சில ஆவணங்கள் கிடைக்க வேண்டியுள்ளன. இந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதன் மூலம், ஆ.ராசா அமைச்சராக இருந்த கால கட்டத்தில் 2ஜி தொடர்பான துறை ரீதியான விவாதங்களின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மேலும் பல விவரங்களை அறிய முடியும்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது நான் குஜராத் செல்லவுள்ளேன். எனவே, விசாரணை தேதியை மாற்ற வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார். தேவையான ஆவணங்கள் கிடைத்த பின்பு சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை அணுகி, விசாரணையை தொடங்குமாறு கோரி மனு செய்யலாம் என்றும் நீதிபதி கூறினார்.

SCROLL FOR NEXT