இந்தியா

தீவிரமடைகிறது பைலின் புயல்: ஒடிசா, ஆந்திரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் உருவாகி உள்ள பைலின் புயல் தீவிரமடைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஆந்திரம் மற்றும் ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இரு மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளன.

பைலின் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புவனேசுவரத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் சரத் சாஹு கூறும்போது, “வியாழக்கிழமை நிலவரப்படி கலிங்கபட்டினத்திலிருந்து 870 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 900 கி.மீ. தொலைவிலும் பைலின் புயல் மையம் கொண்டிருந்தது.

இந்தப் புயல் தீவிரமடைந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதால், வெள்ளிக்கிழமை காலை முதல் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கடல் கொந்தளிப்பாக காணப்படும்.

இந்தப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் இடையே சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கும். அப்போது, கனமழையுடன், மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கடலோரப் பகுதியில் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம் வரை அலை எழும்பும்.

ஒடிசா மாநிலத்தின் கஞ்சம், குர்தா, புரி மற்றும் ஜகத்சிங்பூர், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்” என்றார்.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒடிசா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.

SCROLL FOR NEXT