ராணுவ தினத்தையொட்டி, அனைத்து ராணுவ வீரர்கள், வீர மரணமடைந்த தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய ராணுவ தினம், ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு, 1949-ம் ஆண்டு இந்திய தரைப்படையின் தலைமைப் பொறுப்பை பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா ஏற்றார்.
இந்திய ராணுவத்துக்கு இந்தியரே தலைமை தாங்கத் தொடங்கிய இந்த நாள் ராணுவ தினமாக அனுசரிக்கப்பட்டு, ராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘இந்திய ராணுவத்தின் மதிப்பிட முடியாத சேவைகளுக்கும், துணிவுக்கும் நாம் தலை வணங்குவோம். நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதிலும், இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுவதிலும் ராணுவே முன்னணியில் உள்ளது.
125 கோடி இந்தியர்கள் அமைதியாக வாழ, ராணுவத்தினர் தங்கள் உயிரை பணயம் வைத்து செயல்படுகின்றனர். நமது ராணுவத்தின் தியாகங்களை பெருமையுடன் நினைவுகூருவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.