பிஹார் தலைநகர் பாட்னாவில் பாஜக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தொண்டர்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பினாமி பெயரில் சொத்துகள் சேர்த்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதற்கு எதிராகவும் லாலு மற்றும் அவரது மகன்கள் மீது மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ஜேடி இளைஞர் அணியினர் நேற்று பாட்னாவில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
திடீரென வன்முறையில் இறங்கிய இவர்கள் பாஜக அலுவலகம் மீது கற்களை வீசித் தாக்கினர். இவர்களுக்கு எதிராக பாஜக அலுவலகத்தில் இருந்து கம்புகளுடன் தொண்டர் கள் வெளியே வந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கற்களால் தாக்கப்பட்டு 6 பேர் காயம் அடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங் களின் கண்ணாடிகள் உடைக்கப் பட்டன. இந்நிலையில் போலீஸார் களமிறங்கி வன்முறையை கட்டுப்படுத்தினர்.
பிஹாரின் முசாபர்பூரிலும் பாஜக அலுவலகத்தை ஆர்ஜேடி கட்சியினர் முற்றுகையிட்டனர். ஆனால் போலீஸார் உரிய நேரத்தில் தலையிட்டு வன்முறையை தடுத்தனர்.
இதனிடையே பினாமி சொத்துக் குவிப்பு புகாருக்கு ஆளாகியுள்ள லாலுவுக்கு எதிராக சுஷில்குமார் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர் கள் பாட்னாவில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். பாஜக அலுவலகம் மீதான தாக்குதலுக்கு சுஷில்குமார் மோடி கண்டனம் தெரிவித்தார். “இத்தாக்குதல் வெட்கக்கேடானாது. எதிர்க்கட்சி களின் வாயை அடைக்க தாக்கு தலை மாநில அரசு ஏவிவிட்டுள்ளது” என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால் அமைதியாக போராட்டம் நடத்திய ஆர்ஜேடி தொண்டர்கள் மீது பாஜகவினர் தான் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர் என்று ஆர்ஜேடி குற்றம் சாட்டியுள்ளது.