தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து பெங்களூருவில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. பேருந்து, லாரி, கார், வேன் என 200-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் பெங்களூரு சாலைகள் தீப்பிழம்பாக காட்சியளிக்கின்றன.
பெங்களூருவில் கன்னட அமைப்பினர் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழர்களின் கடைகள்,வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இதனால் பெங்களூரு சாலைகள் போர்க்களமாக மாறி, புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன. இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக லாரி ஓட்டுநர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பெங்களூருவில் வன்முறை வெடித்துள்ளதை தொடர்ந்து மாநகரம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடக போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். தமிழர்கள் வசிக்கும் பகுதி களில் 20 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் கர்நாடக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூருவில் பதற்றமான பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களும் மீட்பு படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள் மீது பெரிய அளவில் வன்முறை நிகழ்த்த கன்னட அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த துணைத்தூதரக அதிகாரிகள் அந்நாட்டு மக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் வெளிநாட்டு மக்கள் அதிகமாக வசிக்கும் டேவிஸ் சாலை, பிரேசர் டவுன், கம்மனஹள்ளி ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் மின்னணு உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் நிறைந்துள்ள எஸ்.பி.ரோடு பகுதியில், கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பெரும்பாலான கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. - வி.ஸ்ரீநிவாசமூர்த்தி
பெங்களூருவில் கன்னட அமைப்பினர் நேற்று தீ வைத்ததில் கொழுந்துவிட்டு எரியும் தமிழக பதிவெண் கொண்ட லாரி.
படம்: ஜி.ஆர்.என்.சோமசேகர் பெங்களூருவில் தீயிட்டு கொளுத்தப்பட்ட லாரியில் எரியாத நிலையில் இருந்த துணி வகைகளை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்றனர். | படங்கள்: கே.பாக்ய பிரகாஷ்
பெங்களூருவில் தமிழக பதிவெண் கொண்ட லாரிக்கு தீ வைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர். | படம்: ஜி.ஆர்.என்.சோமசேகர்
பெங்களூருவில் உல்சூரு பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதம் ஏந்திய போலீஸார். | படம்: சுதாகர் ஜெயின்
கர்நாடக போலீஸாரின் பாதுகாப்பு மட்டுமில்லாமல் கர்நாடக அரசு தற்போது 30 கம்பெனி துணை ராணுவ படையை மத்திய அரசிடம் கோரியுள்ளது. ஏற்கெனவே மைசூரு, மண்டியாவில் 20 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் கர்நாடகா அரசு இந்த கோரிக்கை வைத்துள்ளது. எனவே ஆந்திரா, கேரளா,மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து துணை ராணுவ படையினர் பெங்களூரு விரைந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் பெங்களூருவில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர சிபிஆர்எப், ஆர்பிஎப் உள்ளிட்ட மத்தியப் படைகளும் பெங்களூரு விரைந்துள்ளன.
இந்நிலையில் அச்சத்தில் தவிக்கும் லட்சக்கணக்கான கர்நாடக தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பெங்களூரு தமிழ்ச்சங்கம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மனு அளித்துள்ளன. பெங்களூருவுக்கு வரும் மத்திய படைகளின் பாதுகாப்பு தமிழர்களுக்கு வழங்கப்பட்டால் மட்டுமே ஆபத்துகளை குறைக்க முடியும் என தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர்.