இந்தியா

மும்பையில் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து வந்த முன்னணி பத்திரிகைச் செய்தியாளருக்கு நீதிபதி கண்டனம்

பிடிஐ

மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது செய்தி சேகரிக்க வந்த முன்னணி பத்திரிகையின் செய்தியாளர் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்ததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மும்பையில் கடந்த வாரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, நீதிமன்ற செய்தி சேகரிக்க வந்திருந்த முன்னணி தேசிய பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்தார்.

இதனைக் கண்ட தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், "நீதிமன்றத்தின் மாண்பை மதித்து நடக்க வேண்டும். இது என்ன மும்பை கலாச்சாரமா? நீதிமன்றத்துக்கு டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கிறீர்கள். ஒரு செய்தியாளர் எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடியும்" என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

பின்னர் அங்கிருந்த மும்பை நகராட்சி ஆலோசகரிடம், நீதிமன்றத்துக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு ஆடை கட்டுப்பாடு ஏதும் அமலில் இருக்கிறதா என வினவினார். ஆனால், அவர் அவ்வாறு ஏதுமில்லை எனக் கூறினார்.

செய்தியாளர்கள் எத்தகைய ஆடை அணிந்துவர வேண்டும் என்பது தொடர்பாக எவ்வித வழிகாட்டுதலையும் அவர் வழங்கவில்லை.

செய்தியாளர் ஒருவரின் உடையை உயர் நீதிமன்றம் விமர்சித்துள்ளது இதுவே முதன்முறையாகும்.

SCROLL FOR NEXT