நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் நேற்று அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:
20,000 மெகாவாட் சூரிய மின் திட்டங்கள்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பியுஷ் கோயல்:
மொத்தம், 20,766 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 8,482 மெகாவாட் அளவுக்கு மின் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்கெனவே கையெழுத்திடப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் 10,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, நாட்டின் சூரிய ஒளி மின் உற்பத்தித் திறன், 8,000 மெகா வாட் என்ற அளவில் உள்ளது. வரும், 2022-ம் ஆண்டுக்குள், ஒரு லட்சம் மெகாவாட் என்ற அளவுக்கு உயர்த்துவதை இலக்காக வைத்து செயல்படுகிறோம்.
புகையிலை உற்பத்தியை நிறுத்த யோசனை
வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
வெளிநாடுகளில் இருந்து சட்டப்படி இறக்குமதி செய்யப்படும் புகையிலைப் பொருட்களின் அளவை விட, சட்டத்துக்கு புறம்பான வழிகளில் இந்தியாவுக்குள் கடத்தப்படும் புகையிலைப் பொருட்களின் அளவு அதிகமாக இருப்பது, மத்திய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
கடந்த 2014-15 நிதியாண்டில், ரூ.9.24 கோடி மதிப்பிலான சிகரெட்டுகள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது. 2015-16 நிதியாண்டில் 2,731 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.16.6 கோடி மதிப்பிலான கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாட்டில் புகையிலை உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருகின்றன. புகையிலை விவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்பு வழங்குவது குறித்து ஆராயப்படுகிறது.
ரூ.3,800 கோடி இறைச்சி ஏற்றுமதி
வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில், 56.8 கோடி அமெரிக்க டாலர் (ரூ.3,800 கோடி) மதிப்பிலான இறைச்சி மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. வியட்நாம், எகிப்து, மலேசியா, சவுதி அரேபியா, இராக் ஆகிய நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக எருமை, வெள்ளாடு, செம்மறியாடு போன்றவற்றின் இறைச்சி அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் மட்டுமே, 1,92,748 டன் அளவுக்கு இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மிருகவதைக்கு எதிராக கடும் சட்டம்
சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தாவே:
மிருக வதை தடுப்புச் (1960) சட்டத் திருத்தத்துக்கான பரிந்துரைகள் விலங்கின நல வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மிருகங்களை துன்புறுத்தும் எந்தெந்த செயல்கள் வதையாக கருதப்பட வேண்டும் என்பது குறித்தும், அவற்றுக்கான கடுமையான தண்டனைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இச்சட்டத்தை வலுப்படுத்தும் வகையில், ஆலோசனைகள் முழுமை பெற்ற பின்னர், சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கொண்டுவரப்படும். இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயித்து மத்திய அரசு செயல்படவில்லை.