பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் சந்தர்ப்பவாத கட்சி என்று சிவசேனா குற்றம் காட்டியுள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா நாளிதழில் நேற்று வெளியிடப்பட்ட தலை யங்கத்தில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸும் தேசிய வாத காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இப்போது திடீரென பாஜக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிக்கத் தயார் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் அறிவித்துள்ளார். எந்தவகையில் பார்த்தாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நேற்று வரை பாஜக ஒரு மதவாத கட்சி, அந்தக் கட்சியின் தலைவர்கள் அரைகால் சட்டை அணிபவர்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கேலி, கிண்டல் செய்தது. இப்போது மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சி அமைவதற்காக பாஜகவை ஆதரிக்க முன்வந்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கூறுகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது செய்த ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக பாஜகவுடன் கைகோக்க அந்த கட்சி முயற்சிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச் சாரத்தின்போது தேசியவாத காங்கிரஸ் என்பது தேசிய ஊழல் கட்சி என்று அவர் குற்றம்சாட்டினார். பாஜக மூத்த தலைவர் வினோத் தாக்டே, ஊழல் விவகாரங்களில் ஈடுபட்ட தேசிய வாத காங்கிரஸ் தலைவர்களை சிறைக்கு அனுப் புவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அப்படி இருந்தும் பாஜகவை ஆதரிக்க தயார் என்று தேசியவாத காங் கிரஸ் அறிவித்துள்ளது. அந்தக் கட்சி சந்தர்ப்பவாத கட்சி என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் பதிலடி
தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் மஜித் மேமன் கூறியதாவது: சிவசேனா வரம்பு மீறி பேசுகிறது. சாம்னாவில் வெளிவரும் கட்டுரைகளை நாங்கள் கருத்திற் கொள்வது இல்லை. அந்த நாளிதழை மற்றவர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.