டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நுகர்வோரின் நலனைக் கவனத்தில் கொண்டுள்ளோம். கடந்த ஜனவரி மாதம் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக தற்போது டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை.
கடந்த ஜனவரி முதல் மாதந்தோறும் டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 காசுகள் வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலையுயர்வு அல்லாமல் அமைச்சரவை ஒப்புதலுடன் மேலும் விலையை உயர்த்த இதுவரை திட்டமிடவில்லை.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், டீசலின் உற்பத்தி விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில், ஒரு லிட்டர் ரூ.14.50 நஷ்டத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு ரூ. 36.83 மற்றும் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.470.38 இழப்பு ஏற்படுகிறது.
உற்பத்தி விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, நஷ்டத்திலிருந்து மீள மாற்று வழிகளை யோசித்து வருகிறோம். நடப்பு நிதியாண்டில் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விற்பனையால் ஏற்படும் ரூ.1,28,976 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டியுள்ளது” என்றார் மொய்லி.