இந்தியா

டார்ஜிலிங்கில் பரவும் வன்முறைக்கு தீவிரவாத குழுக்களின் ஆதரவு: மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

டார்ஜிலிங் போராட்டத்துக்கு தீவிரவாதக் குழுக்களின் ஆதரவு இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளை ஒருங்கிணைத்து ‘கூர்க்காலாந்து’ தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா ஈடுபட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக டார்ஜிலிங்கின் சிங்மாரி யில் உள்ள கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைமை அலுவலகத் தில் இருந்து தொண்டர்கள் நேற்று பேரணியாக புறப்பட்டனர்.

அப்போது போலீஸாருக்கும் ஜிஜேஎம் தொண்டர்களுக்கும் மோதல், வன்முறை வெடித்தது. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸார் மீது கற் களையும், பெட்ரோல் குண்டு களையும் போராட்டக்காரர்கள் வீசினர். அப்பகுதியில் இருந்த வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

பாதுகாப்புப் படை வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த தொண்டர்கள் இருவர் பலியானதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர். ஆனால், துப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தப்படவில்லை என, போலீஸ் அதிகாரி அனுஜ் சர்மா மறுத்துள் ளார். அந்த அமைப்பினர்தான் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த வன்முறையின் பின்னணியில் பெரிய சதி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களும், தீவிரவாத அமைப்புகளும், ஒருசில வெளிநாடுகளின் பின்னணியும் இதில் இருப்பதாகத் தெரிகிறது.

இத்தகைய கலவரத்தில் சாதாரண மனிதர்களால் ஈடுபட முடியாது. இது தீவிரவாதிகளின் எண்ணத்தை ஒட்டிய செயல்பாடுகளாக இருக்கின்றன. எங்களுக்கு இதுதொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வன்முறையை ஆதரிக்க முடியாது. ஜிஜேஎம் அமைப்பினருடன் பேசுவதற்குத் தயாராக உள்ளேன். மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT