அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதரை பொது இடத்தில் கைது செய்தது இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தர பிரதேசம், பருக்காபாதில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
அமெரிக்காவின் செயலை இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகவே கருதுகிறோம். எங்கள் ஆட்சேபத்தை அமெரிக்காவுக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். அதற்கு அந்த நாடு என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை அறிய காத்திருக்கிறோம். பதில் கிடைத்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு திரும்பியபோது பொது இடத்தில் போலீஸார் அவரைக் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது ஆம் ஆத்மி
டெல்லி சட்டமன்றத் தேர்தல் குறித்து சல்மான் குர்ஷித் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியை இப்போது மணமகனுக்கு ஒப்பிடலாம். திருமணத்துக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஆனால், அந்தக் கட்சி தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில் அதனை ஏற்று ஆட்சி அமைத்து திருமண வாழ்க்கையையும் அதன் கஷ்ட நஷ்டங்களையும் அந்தக் கட்சி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.