பலாத்கார வீடியோ காட்சிகள் அடங்கிய டிவிடிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ரா சந்தைகளில் விற்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து கள நிலவரம் அறிய 'தி இந்து' (ஆங்கிலம்) முற்பட்டது. மீரட் நகரில் டிவிடிகள் விற்கப்படும் பகுதிக்குச் சென்றபோது அங்கிருந்த வியாபாரிகள் சிலர் சொன்ன தகவல் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
பெயர் குறிப்பிட விரும்பாத வியாபாரி: "பலாத்கார வீடியோ.. இது புதிய சர்ச்சை அல்ல. அப்படிப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய டிவிடிகள் இருப்பது உண்மையே. ஆனால், நான் என் கடையில் அவற்றை விற்பனை செய்வதில்லை. இத்தகைய வீடியோக்கள் பின்னணியில் சதி கும்பல் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் வைத்திருக்கின்றனர்.
அதனால் பலாத்கார குற்றங்களில் ஈடுபடும்போது அந்த நபருடன் இருக்கும் மற்ற நபர்களே அந்தக் கொடூரத்தை காட்சியாக்கிவிடுகின்றனர். அத்துடன் அவற்றை வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொள்கின்றனர். இப்படித்தான் இந்த வீடியோக்கள் சந்தையில் விற்பனையாகின்றன" என்றார்.
மற்றொரு கடைக்காரர் கூறும்போது, "பலாத்கார வீடியோக்கள் ஆக்ராவில் விற்கப்படுவதில்லை. டெல்லி பாலிகா பஜாரில் இத்தகைய டிவிடிகள் விற்கப்படுவதாக கேட்டிருக்கிறேன். ஆனால் ஒட்டுமொத்த ஊடகமும் உ.பி.யில் மட்டும்தான் இத்தகைய பாலியல் பலாத்கார டிவிடிகள் விற்கப்படுவதாக கூறுகின்றன" என்றார்.
இன்னொரு வியாபாரியோ, "பலாத்கார சம்பவங்களை படம் பிடிப்பவர்கள் அவற்றை ஆபாச படம் எடுப்பவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அவர்கள் அவற்றை டிவிடிகளாக்கி சந்தையில் புழக்கத்தில் விடுகின்றனர்" எனக் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் பலாத்கார வீடியோ டிவிடிகள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து மீரட் நகரின் டிவிடிகள் விற்பனைக்கு பெயர் பெற்ற பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், அத்தகைய டிவிடிகள் ஏதும் வெளியாகவில்லை.