மத்தியப் பிரதேச மாநிலம் மான்ட்சர் மாவட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 விவசாயிகள் பலியானதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டியில், "போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என மான்ட்சர் மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் கூறிவந்த நிலையில் அமைச்சரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மான்ட்சர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் மான்ட்சர் மாவட்டத்தில் 2 கம்பெனிகள் அதிரடி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.