பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனம் மற்றும் இந்தியாவில் இயங்கும் அதன் துணை நிறுவனங்கள், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு கட்சி நிதியாக சுமார் ரூ.12 கோடி வழங்கின.
இதனை தனது 2012-ம் ஆண்டு ஆண்டறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் மற் றும் பாஜக மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியது மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தை (எப்சிஆர்ஏ) மீறியது உள்ளிட்டவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜனநாயக சீரமைப்புக்கான சங்கம் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், “சிபிஐ அல்லது நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் தனி விசா ரணை அமைப்பு மூலம் இந்த நிதி பற்றி விசாரிக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
முன்னாள் இந்திய அரசு செயலர் இ.ஏ.எஸ். சர்மாவும் இதில் ஒரு மனுதாரர் ஆவார்.
மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ் ஆஜரானார். “அந்த வெளி நாட்டு நிறுவனத்தில் பெரும் பான்மை பங்குகளை ஒரு இந்தியர் வைத்துள்ளார், அவருடைய இந்திய நிறுவனங்கள்தான் நிதியளித்தன. எனவே, சட்ட விதிமீறல் இல்லை'' என காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பிரதீப் நந்ரஜோக், ஜெயந்த் நாத் ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில், “பாஜகவும் காங்கிரஸும் வெளிநாட்டு பங்களிப்பை பெற்ற விவகாரத்தில் சட்ட மீறல்கள் நடைபெற்றதற்கு போதிய முகாந்திரம் உள்ளது. வேதாந்தா குழுமம் வெளிநாட்டு அமைப்புதான். அனில் அகர்வாலுக்குச் சொந்தமான இந்திய துணை நிறுவனங்களான ஸ்டெர்லைட் மற்றும் சீசா ஆகிய வையும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் படி (எப்சிஆர்ஏ) வெளிநாட்டு நிறுவனங் களாகவே கருதப்படும். ஆகவே காங்கிரஸ், பாஜக மீது மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் ஆறு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.