அவசரச் சட்டத்தை விமர்ச்சித்து தான் கூறிய வார்த்தைகள் தவறானவை என்று தனது தாயார் சோனியா காந்தி கண்டித்ததாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் அரசியல்வாதிகளைக் காக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அமைச்சரவை திரும்பப் பெற்ற பிறகு, முதன் முறையாக அதுகுறித்து ராகுல் காந்தி பேசினார்.
குஜராத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் கடுமையானதாக இருந்தது என்று என் அம்மா (சோனியா காந்தி) சொன்னார். என்னுடைய வார்த்தைகள் தவறானதாக இருந்திருக்கலாம். ஆனால், என்னுடைய உணர்வுகள் தவறானவை அல்ல என்பதை உணர்ந்தேன்.
என்னுடைய கருத்தை வெளிப்படுத்தும் உரிமை எனக்கு உள்ளது. அதற்கு, காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலானோரும் ஆதரவு தெரிவித்தனர்” என்றார் ராகுல் காந்தி.
முன்னதாக, அவசரச் சட்டம் முட்டாள்தனமானது. அதைக் கிழித்து எறிய வேண்டும் என்று ராகுல் காந்தி பகிரங்கமாகப் பேசியது, மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி, அவசரச் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.