இந்தியா

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 16 வீரர்கள் பலி

செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 11 பேர், மாநில போலீஸார் 4 பேர், ஒரு தொழிலாளி என 16 பேர் உயிரிழந்தனர்.

சுக்மா மாவட்டம் ஜெரூம் நுல்லா வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.எப். மற்றும் மாநில போலீஸார் 44 பேர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

டோங்காபால் வனப் பகுதியில் ஜெரூம் காட் பகுதியில் போலீஸ் வாகனங்கள் வந்தபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர். அதே நேரத்தில் மலைப் பகுதிகளில் மறைந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பாதுகாப்புப் படைக்கு தலைமை தாங்கிய இன்ஸ்பெக்டர் சுபாஷ் உள்பட 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள், 4 மாநில போலீஸார் உயிரிழந்தனர். அந்தப் பகுதி வழியாக வந்த தொழிலாளி ஒருவரும் குண்டடிபட்டு இறந்தார்.

முதல்வர் அவசர ஆலோசனை

மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து தகவல் அறிந்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங் தனது அன்றாட அலுவல்களை ரத்து செய்துவிட்டு போலீஸ் உயரதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2010 ஏப்ரலில் இதே பகுதியில் சுமார் 76 பாதுகாப்புப் படை வீரர்களை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்றது நினைவுகூரத்தக்கது.

இதுவரை நடந்த பெரிய தாக்குதல்கள்:

2008 ஜூன் 29: ஒடிசா மாநிலம் பாலிமேளா அணைப் பகுதியில் படகில் சென்ற பாதுகாப்புப் படை வீரர்கள் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 38 வீரர்கள் உயிரிழந்தனர்.

2008 ஜூலை 16: ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் கண்ணி வெடி தாக்குதலில் 21 போலீஸார் பலியாயினர்.

2009 அக்டோபர் 8: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் லகரி போலீஸ் நிலையத்தின் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 17 போலீஸார் உயிரிழந்தனர்.

2010 பிப்ரவரி 15: மேற்கு வங்கம் மிட்னாபூர் மாவட்டம் சில்டாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பலியாயினர்.

2010 ஜூன் 29: சத்தீஸ்கர் நாராயண்பூர் மாவட்டத்தில் 26 சி.ஆர்.பி.எப். வீரர்களை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்றனர்.

2013 மே 25: சத்தீஸ்கர் மாநிலம் தார்பா பள்ளத்தாக்குப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 25 பேர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT